சொல்-இலக்கணம் -10 ஆம் வகுப்பு சமச்சீர்


சொல்:
ஓர் எழுத்து தனித்து நின்றோ, பல எழுத்துகள் தொடர்த்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.
பதம், மொழி, கிளவி என்பன ஒரு பொருள்தரும் பல சொற்கள்.
பதம் - பகுபதம் ( பகுக்கவியலும் பதம் ); பகாப்பதம் ( பகுக்கவியலாபதம்
மொழி - தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி
கிளவி - இரடடைக்கிளவி (இரட்டைச்சொல்
(எ-டு)
பூ ,கை, தா, வா - இவை ஓரெழுத்துச் சொற்கள்.
மண், மாந்தர், நடந்தனர் - இவை இரண்டு முதலாகப் பல எழுந்துகள் தொடர்ந்த சொற்கள்.
மூவகை மொழிகள்
மொழி தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி என மூவகைப்படும்.
1. தனிமொழி
ஒரு சொல் தனித்து நின்று பொருளை உணர்த்துவது, தனிமொழி.
(எ-டு) வா, கண், செய்தான்.
2. தொடர்மொழி
இரண்டு அல்லது அதற்குமேற்பட்ட சொற்கள் தொடர்ந்துவந்து பொருளை உணர்த்துவது தொடர்மொழி
(எ-டு)
1. படம் பார்த்தாள்.
2. பசுவும் கன்றும் தோட்டத்தில் மேய்ந்துகொண்டிருக்கின்றன.
3. பொதுமொழி
ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும், அதேசொல்லே பிற சொற்களுடன் தொடர்ந்துநின்று வேறு பொருளையும் தந்து, தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி. .
(எ-டு) அந்தமான்
அந்தமான் என்பது ஒரு தீவையும், அச்சொல்லே அந்த + மான் எனப் பிரிந்து நின்று, அந்த மான் (விலங்கு) என வேறுபொருளையும் தருகின்றது.
இதேபோல், பலகை, வைகை, தாமரை, வேங்கை முதலியன தனிமொழியாகவும் பொதுமொழியாகவும் வருவதை அறிக.
ஒருமொழி ஒருபொருள னவாம் தொடர்மொழி
பலபொரு ளனபொது இருமையும் ஏற்பன. - நன்னூல், 260

வினைச்சொல்:
இராமன் வந்தான். கண்ணன் நடந்தான்.
இத்தொடர்களில் இராமன், கண்ணன் என்பன பெயர்ச்சொற்கள். அவையே எழுவாய்களாகவும் உள்ளன. வந்தான், நடந்தான் ஆகிய சொற்கள் வருவதும், நடப்பதும் ஆகிய செயல்களைக் குறிப்பதால், இவை வினைச்சொற்கள். இவையே பயனிலைகளாகவும் ( முடிக்கும் சொற்களாகவும் ) உள்ளன. இவ்வாறு, எழுவாய் செய்யும் செயல் அல்லது தொழிலைக் குறிக்கும் சொற்கள் வினைச்சொற்கள்.

வினைமுற்று:
அருளரசு வந்தான். வளவன் நடந்தான்.
  • இத்தொடர்களில் வந்தான், நடந்தான் என்னும் வினைச்சொற்களின் பொருள் முற்றுப்பெற்று வந்துள்ளன. 
  • இவ்வாறு, தன்பொருளில் முற்றுப்பெற்று வந்துள்ள வினைச்சொற்களை வினைமுற்றுகள் என்பர். இது முற்றுவினை எனவும் வழங்கப்படும்.
  • “வந்தான், நடந்தான்' என்னும் வினைமுற்றுகள் “ஆன்” என்னும் விகுதி பெற்றுள்ளதால், உயர்திணையையும், ஆண்பாலையும், ஒருமை என்ற எண்ணையும், படர்க்கை இடத்தையும், உணர்த்துகின்றன,
  •  த் என்ற இடைநிலை வந்துள்ளதால் (நட + த் ( ந் ) + த் + ஆன்);
  • (வா (வ) + த் (ந்) + த் + ஆன்) இஃ;து இறந்த காலத்தையும் உணர்த்துகிறது
  • வினைமுற்று எழுவாய்க்குப் பயனிலையாய் அமையும்; 
  • முக்காலங்களில் ஒன்றை உணர்த்தும்; 
  • திணை, பால், எண், இடங்களைக் காட்டும்
இவ்வினைமுற்று தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இருவகைப்படும்.

தெரிநிலை வினைமுற்று
  • செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறனையும் தெரிவித்துக் காலத்தை வெளிப்படையாகக் காட்டுவது தெரிநிலை வினைமுற்று.

(எ-டு) உழுதான்
          செய்பவன் - உழவன்
          கருவி - கலப்பை
          நிலம் - வயல்
          செயல் - உழுதல்
          காலம் - இறந்தகாலம்
          செய்பொருள் -நெல்
           செய்பவன் கருவி நிலம் செயல் காலம்
           செய்பொருள் ஆறும் தருவது வினையே. - நன்னூல், 320
குறிப்பு வினனமுற்று:
பொருள்முதல் ஆறனையும் அடிப்படையாகக்கொண்டு, முன் சொல்லப்பட்ட செய்பவன் முதலான ஆறனுள் கருத்தா ஒன்றனை மட்டும் தெரிவித்துக் காலத்தைக் குறிப்பாகக் காட்டும் வினைமுற்று, குறிப்பு வினை-முற்று எனப்படும்.
அவன் பொன்னன் - பொன்னை உடையவள் - பொருள்
அவன் விழுப்புரத்தான் - விழுப்புரத்தில் வாழ்பவன் - இடம்
அவன் சித்திரையான் - சித்திரையில் பிறந்தவன் - காலம்
அவன் கண்ணன் - கண்களை உடையவன் - சினை
அவன் நல்லன் - நல்ல இயல்புகளை உடையவன் - குணம்
அவன் உழவன் - உழுதலைச் செய்பவன் - தொழில்
பொருள்முதல் ஆறினும் தோற்றிமுன் ஆறனுள்
வினைமுதல் மாத்திரை விளக்கல் வினைக்குறிப்பே.- நன்னூல், 321
அவன் என்னும் எழுவாய்க்குப் பயனிலையாய் வந்த “பொன்னன்”, என்பதே குறிப்பு வினை ஆகும். பொன்னை உடையவனாய் இருந்தான், இருக்கின்றான், இருப்பான் எனப் பொன்னன் என்பது முக்காலத்தையும் குறிப்பாக உணர்த்துகிறது.

எச்சம்
கயல்விழி படித்தாள். கோதை சென்றாள்.
இத்தொடர்களில் படித்தாள், சென்றாள் என்பன வினைமுற்றுகள்.
இவ்வினைமுற்றுகள் சில இடங்களில் ஆள், என்னும் விகுதி குறைந்து படித்த, சென்ற எனவும், படித்து, சென்று எனவும் வரும். இச்சொற்கள் பொருளில் முற்றுப்பெறாத முழுமையடையாத வினைச்சொற்கள்; ஆதலால், எச்சம் எனப்படும்; அல்லது வினைமுற்றின் (ஆள்) விகுதி குறைந்து நிற்கும் சொல்லே எச்சம் எனப்படும்.
பெயரெச்சம்
படித்த கயல்விழி. சென்ற கோதை,
படித்த, சென்ற என்னும் முற்றுப்பெறாத எச்சவினைகள் கயல்விழி, கோதை எனப் பெயரைக்கொண்டு முடிந்ததால் அவை பெயரெச்சங்கள் எனப்படும். அதாவது, ஓர் எச்சவினை ( வந்த, நடந்த ) பெயரைக்கொண்டு முடிந்தால், அது பெயரெச்சம் எனப்படும்.
இப்பெயரெச்சம் காலவகையால் மூவகைப்படும்.
இறந்தகாலப் பெயரெச்சம் - படித்த கயல்விழி, சென்ற கோதை
நிகழ்காலப் பெயரெச்சம் - படிக்கின்ற கயல்விழி, செல்கின்ற கோதை
எதிர்காலப் பெயரெச்சம் - படிக்கும் கயல்விழி, செல்லும் கோதை
இது தெரிநிலைப் பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என இருவகைப்படும்.
தெரிநிலைப் பெயரெச்சம்
வந்த பையனைப் பார்த்துக் கண்ணன் நின்றான்.
இத்தொடரில் வந்த என்பது பையன் என்னும் பெயரைக்கொண்டு முடிவதால், பெயரெச்சம் எனப்படும்.
செய்த, செய்கின்ற, செய்யும் என்பன முறையே முக்காலத்திற்கும் உரிய பெயரெச்ச வாய்பாடுகள்.
இவை முக்காலத்தையும் செயலையும் வெளிப்;படையாகக் காட்டிச் செய்பவன் முதலான ஆறாம் எஞ்சி நிற்கும். இவை உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் வரும்.
(எ-டு)
உண்ட இளங்கோவன்.
செய்பவன் - இளங்கோவன்
கருவி - கலம்
நிலம் - வீடு
செயல் - உண்ணுதல்
காலம் - இறந்த காலம்
செய்பொருள் - சோறு
உண்கின்ற இளங்கோவன், உண்ணும் இளங்கோவன் என நிகழ்காலம், எதிர்காலம் காட்டும் பெயரெச்சங்களையும் மேற்கண்டவாறே பொருத்திக் காணலாம்.
உடன்பாடு - எதிர்மறை
(எ-டு) உண்ட இளங்கோவன் - உண்ணாத இளங்கோவன்
குறிப்புப் பெயரெச்சம்
காலத்தையோ செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று, பெயர்ச்சொல்லைக்கொண்டு முடியும் எச்சம், குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.
(எ-டு) நல்ல பையன்
இத்தொடரில் நல்ல என்னும் சொல் காலத்தையோ செயலையோ உணர்த்தாமல், பண்பினை மட்டும் உணர்த்தி நின்று, பெயர்ச்சொல்லைக்கொண்டு முடிந்துள்ளது.
இது காலத்தைக் (இன்று நல்ல பையன், நேற்று நல்ல
பையன், நாளை நல்ல பையன்) குறிப்பால் உணர்த்தும்.
உடன்பாடு - எதிர்மறை
(எ-டு) நல்ல மாணவன் - தீய மாணவன்

வினையெச்சம்

  • முற்றுப்பெறாத வினைச்சொற்கள் (எச்சங்கள்) வேறொரு வினைமுற்றைக்கொண்டு முடிந்தால், அது வினையெச்சம் எனப்படும்.

(எ-டு)படித்து வந்தான், பாடக் கேட்டான், ஓடிச் சென்றான், போய்ப் பார்த்தான்.
அதாவது, ஓர் எச்சவினை, வினையக்கொண்டு முடிந்தால், அது வினையெச்சம் எனப்படும்.
இவ்வினையெச்சம் காலவகையால் மூவகைப்படும்.
இறந்தகால வினையெச்சம் - படித்து வந்தான், ஓடிச் சென்றான்.
நிகழ்கால வினையெச்சம் - படித்து வருகின்றான் ஓடிச்செல்கின்றான்
எதிர்கால வினையெச்சம் - படித்து வருவான், ஓடிச் செல்வான்.
இவ்வினையெச்சமும் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும்.
பெயரெச்சத்தில் எச்சங்கள் மட்டுமே செய்த, செய்கின்ற, செய்யும் எனக் காலத்துக்கேற்ப மாறும்; பெயர்கள் மாறா. வினையெச்சத்தில் எச்சங்கள் மாறா. அவை முக்கால வினைமுற்றுகளையும் பெற்றுவரும்.
தெரிநிலை வினையெச்சம்
படித்துத் தேறினான். படிக்கச் செல்கின்றான்
இத்தொடர்களில் படித்து, படிக்க என்னும் சொற்கள் எச்ச வினையாய் நின்று காலத்தைக் காட்டித் தேறினான், செல்கினறான்; ஆகிய வினைமுற்றுகளைக் கொண்டு பொருள் முடிவு பெறுகின்றன. இவ்வாறு காலத்தையும், செயலையும் உணர்த்தி வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சவினை, தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.

குறிப்பு வினையெச்சம்
மெல்லப் பேசினான். கண்ணன் நோயின்றி வாழ்ந்தான்.
இவ்விரு தொடர்களிலும் உள்ள மெல்ல, இன்றி என்னும் எச்ச வினைச்சொற்கள் காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பினை உணர்த்தி நின்று, வினைமுற்றைக்கொண்டு முடிந்துள்ளன. ஆகையால், இவை குறிப்பு வினையெச்சம் எனப்படும்.

முற்றெச்சம்
மைதிலி வந்தனள் பாடினள். முருகன் படித்தனன் தேறினன்.
இத்தொடர்களில், வந்தனள், படித்தனன் என்னும் வினைமுற்றுகள் வந்து, படித்து என்னும் வினையெச்சப் பொருள்களில் நின்று, வேறு வினைமுற்றுகளைக் கொண்டு முடிந்துள்ளன. இவ்வாறு ஒரு வினைமுற்றுச் சொல், எச்சப்பொருளில் வந்து, மற்றொரு வினைமுற்றைக் கொணடு முடிவதே முற்றெச்சம் எனப்படும்.

மொழித்திறன் பயிற்சி
தொகைச்சொல்
கனிகளுள் எவற்றை முக்கனி எனக் குறிப்பிடுகிறோம்?
மா, பலா, வாழை.
முக்கனி என்பது தொகைச்சொல் எனப்படும்.
தொகை என்னும் சொல்லுக்குத் தொகுத்தல் என்பது பொருள்.
சில தொகைச்சொற்களை விரித்துக் காண்போம்.
இருவினை - நல்வினை, தீவினை; தன்வினை, பிறவினை
இருதிணை - உயர்திணெ, அஃறினை; அகத்திணை, புறத்திணை.
முத்தமிழ் - இயல், இசை, நாடகம்
முப்பால் - அறம், பொருள், இன்பம்.
மூவிடம் - தன்மை, முன்னிலை, படர்க்கை.
மூவேந்தர் - சேரர், சோழர், பாண்டியர்.
நாற்றிசை - கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு.
நானிலம் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்.
ஐந்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.
ஐம்பால் - ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்.
ஐம்புலன் - தொடுஉணர்வு, உண்ணல், உயிர்த்தல், காணல், கேட்டல்.
ஐம்பொறி - மெய், வாய், மூக்கு, கண், செவி.

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...